புதுச்சேரி, ஜூன் 17: சட்டமன்றத்தை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி கமிஷனில் சேர்க்கப்படததால், முறையற்ற நிதி பகிர்வு வழங்கப்படுகிறது. மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், கூடுதலாக ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடி வரை நிதி கிடைக்கும். எனவே, மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு 3 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது, துணை ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்கான தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், கட்சி சாயலை பொருட்படுத்தாமல், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. புதுச்சேரி சட்டமன்றமும் அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் தீவிர விருப்பம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது தான்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அரசியலமைப்பின் படி அல்ல. ஆனால் பல தசாப்தங்களுக்கு முந்தைய பாராளுமன்ற சட்டமான 1963ம் ஆண்டு யூனியன் பிரதேச அரசு சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ள ஒரு வரையறுக்கப்பட்ட அரசு என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். அமைச்சர்கள் குழு மற்றும் சட்டமன்றத்துடன் அரசாங்கம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அமைச்சர்கள் குழு மட்டத்தில் அதிகாரங்கள் இல்லாததால் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்த முடியவில்லை.
சட்டமன்றத்தை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி கமிஷனில் சேர்க்கப்படவில்லை. இது ஒரு யூனியன் பிரதேசம் என்று கூறி, அதன் வளர்ச்சிக்கு முறையற்ற நிதி பகிர்வு வழங்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், தற்போதுள்ள நிதி பகிர்வின்படி, சுமார் ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடி வரை கூடுதல் நிதியை எதிர்பார்க்கலாம். இது வேகமாக வளர்ந்து வரும் புதுச்சேரியை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மேம்படுத்த பல்வேறு உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
யூனியன் பிரதேசமாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், தொழில்துறை மேம்பாட்டிற்காக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. எனவே, துணை ஜனாதிபதி, புதுச்சேரியின் வாழ்க்கை தரத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், மேம்பட்ட சுற்றுலா மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்காகவும், முடிந்தவரை உயர் மட்டங்களில் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி அளித்த கடிதத்தில் கூறியுள்ளார். அப்போது புதுவை கவர்னர் கைலாஸ்நாதன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.