கூடலூர், மே 30: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காற்று காரணமாக கடந்த 6 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதிக அளவில் மரங்கள் விழுந்ததால் சீரமைப்பு பணிகள் ஒவ்வொரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள ஆரூற்றுப்பாறை பகுதியில் ஆறாவது நாளாக நேற்றும் மின் இணைப்பு கிடைக்காத நிலை உள்ளது. தனியார் தோட்டம் வழியாக செல்லும் மின்பாதையில் மின் கம்பிகள் மீது விழுந்துள்ள மரங்களை முழுமையாக அகற்றிய பின்னரே சீரமைப்பு பணிகள் முடிந்து மின் இணைப்பு கிடைக்கும் நிலை உள்ளது.
இதனால் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதி மக்கள் தொலைதொடர்பு மற்றும் அலைபேசி தொடர்புகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் இருட்டில் வசித்து வருகின்றனர். பெரிய சூண்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று முன்தினம் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தி நகர் பகுதியில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் காற்றில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. குடியிருப்புகள் வழியாக செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒடிந்து விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்தன. ஆனால் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த வழியாக வந்து சிறுவன் ஒருவன் மின் கம்பிகளுக்கு இடையே புகுந்து வந்து தகவல் தெரிவித்துள்ளான். உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மக்கள் மரத்தை வெட்டி அகற்றினர். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்துகள் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.