புதுக்கோட்டை, மே 27: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் அதிகாரிகள் பெற்றனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கூடலூர் கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நாங்கள் குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் குடியிருந்து வருகிறோம்.
இந்நிலையில், இந்த குடியிருப்புகளை பழுது பார்க்கும் வேலைக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அரரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகைக்கு ஒப்பந்தகாரர் மூலமாக கட்டித் தருவதாக கூறி ஒப்பந்தக்காரரை அழைத்து வந்தனர். ஆனால், ஒப்பந்தகாரர்களிடம் இந்த வேலையை கொடுக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறேம் என்று கூறினோம்.
ஆனால், அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பிறகு அந்த வேலையை நிறுத்திவிட்டனர். எனவே, மீண்டும் குடியிருப்புகளை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.