மதுரை, ஜூன் 11: பிரசித்திபெற்ற மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47வது தலமாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினசரி மாலையில் வியூக சுந்தர்ராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 6 மணிக்கு வியூக சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வந்து, காலை 8:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.