நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள ரங்கநாராயணபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தங்கராஜா மகன் முருகன் (24). இவர், டிப்ளமோ படித்து விட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன் மகள் சுமிகா (19), நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். முருகனும், சுமிகாவும் காதலித்து வந்தனர். இதையறிந்த சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 18ம் தேதி காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் திருமணம் செய்து ெகாண்டனர். இந்நிலையில் முருகேசன், தனது மகளை காணவில்லை என கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மதுரை ஐகோர்ட் கிளையிலும் முருகேசன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த வாரம் முருகனையும், சுமிகாவையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரும் திருமணம் செய்து ெகாண்டதாக கூறி, சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். முருகனும், சுமிகாவும் மேஜர் என்பதால் காதல் தம்பதியினர் விருப்பப்படி செல்வதற்கு நீதிபதி அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் காதல் தம்பதியினர் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதையறிந்த சுமிகாவின் பெற்றோர், உறவினர்கள் கடந்த 16ம் தேதி இரவு வீட்டில் இருந்த சுமிகாவை காரில் கடத்திச் சென்றனர். தடுக்க முயன்ற முருகனின் பெற்றோர் சரமாரியாக தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து கூடங்குளம் போலீசில் முருகனின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி 16 பேர் மீது வழக்கு பதிந்து சுமிகாவை தேடி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சுமிகாவின் உறவினர்கள் தங்கமுத்து, சுமித், அமுதா, பாப்பா, தங்கம்மாள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று சுமிகாவின் சித்தப்பா விஜயகுமார் (41), தாய்மாமாக்கள் செல்வக்குமார் (42), வைகுண்டபதி (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட சுமிகாவை மீட்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என வந்த தகவலையடுத்து ஒரு தனிப்படையினர் திருவனந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடி வருகின்றனர். தென்காசியில் குஜராத்தை பூர்வீமாக கொண்ட இளம்பெண், அவரது காதல் கணவரிடம் இருந்து பிரித்து கடத்தப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள், நெல்லை மாவட்டத்தில் அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….