சென்னை, ஆக.20: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொது குழாய் மூலம் வழங்கும் குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு குடிநீர் அளவுமானி பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 80 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பைப்லைன் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றிலும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. ஆனால், பருவமழையை பொறுத்து உரிய காலத்தில் இந்த தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது. இவற்றை தவிர வடசென்னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும், தென்சென்னைக்கு தெற்கில் நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது.
மேலும், கூடுதலாக நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதுமாக 2 புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், தாமரைப்பாக்கம், பூண்டி, கன்னிகைப்பேர், பஞ்செட்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாரியத்தின் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் சென்னை மாநகராட்சி பகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சில இடங்களில் உள்ள கிணறுகளிலிருந்தும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, குடியிருப்புகள், நிறுவனங்கள் என 8 லட்சத்து 42 ஆயிரம் குடிநீர் இணைப்புகளை சென்னை குடிநீர் வாரியம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 1000 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய ₹43ம், ஏரிகளில் உள்ள நீரை சுத்திகரித்து, அவற்றை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வரை 1000 லிட்டருக்கு ₹25ம் செலவாகிறது. ஆனால், சென்னை குடிநீர் வாரியம் இதுநாள் வரை எவ்வளவு நீரைப் பயன்படுத்தினாலும் குடியிருப்புகளிடம் மாதம் ₹84 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது.
பல வீடுகளில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதில்லை. இதனால் மாநகரின் குடிநீர் ஆதாரம் விரைவாக காலியாகிறது. உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. எனவே, குடிநீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் அளவுமானியை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘குடிநீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவை கணக்கிட, அனைத்து வணிக கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மேம்பட்ட அளவுமானி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த ஆவணங்களை தயாரித்து வருகிறோம். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அளவு மானிகளை பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் அளவில்லாத நீர் விநியோகத்தை பெறுகின்றனர். ஒவ்வொரு குடியிருப்பும் எவ்வளவு நீரைப் பயன்படுத்தினாலும், ஒரு மாதத்துக்கு நிலையாக ₹84 செலுத்துகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வணிக மற்றும் அதிக அளவு குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்காக சுமார் 21 ஆயிரம் அளவு மானிகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு 500 கிலோ லிட்டர் வரை (ஒரு கிலோ லிட்டர் என்பது 1000 லிட்டர்) ஒரு கிலோ லிட்டருக்கு ₹114, கல்வி நிறுவனங்களுக்கு ₹94, பிற நிறுவனங்களுக்கு ₹81 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிப்படியாக அனைத்து அடுக்குமாடி, வணிக பிரிவுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அளவுமானிகள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.
இணையவழி சேவை
சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக கட்டணங்களை செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ, கியூஆர் குறியீடு மற்றும் பி.ஏ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும் போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.
வெகுவாக குறையும்
குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய மாநகரமான சென்னையில் குடிநீர் மிக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பலர் கார்களை கழுவவும், வீட்டுத் தோட்டங்களுக்கு பாய்ச்சவும், வீட்டு நீச்சல் குளத்தை நிரப்பவும் சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஏழை மக்களுக்கும், இவர்களுக்கும் ஒரே கட்டணத்தை வாரியம் வசூலித்து வருகிறது. இது ஏற்புடையதாக இல்லை. அதனால் சென்னை மாநகரில் குடிநீர் அளவு மானியை நிறுவ வேண்டியது அவசியமான ஒன்று. அதே நேரத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அளவு மானியைப் பொருத்தினால் நிச்சயம் வாரியத்தின் குடிநீர் விநியோக அளவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.
மாதிரிகள் பரிசோதனை
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 300 முதல் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து குடிநீரின் தரம் ஆய்வு செய்தும் வருகிறது. ஏராளமான இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து, குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.