திருப்புவனம், நவ. 30: திருப்புவனம் அருகே, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்புவனம் அருகே பாப்பாகுடியில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பாப்பாகுடி – கண்ணாரிருப்பு சாலையில் பாப்பாகுடி காலனி பகுதியில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக பள்ளத்தின் இருபுறமும் மண் சரிந்து பெரிய பள்ளமாகி உருமாறியுள்ளது.
இதனால் அந்த வழியாக டூவீலர்கள், 108 ஆம்புலன்ஸ்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 1 வாரமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாப்பாகுடி, கண்ணாரிருப்பு பகுதி மக்கள் திருப்புவனம், மதுரை செல்வதற்கு திருப்பாச்சேத்தி அல்லது படமாத்தூர் வழியாக 10 கி.மீ தூரத்துக்கு சுற்றிக்ெகாண்டு செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என, புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென பாப்பாகுடி காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.