கலசபாக்கம், அக்.25: கலசபாக்கம் அருகே அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவில், ஏராளமான பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி சிறுமிகளுக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த லாடவரம் ஊராட்சி, கெங்கநல்லூர் கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த போலாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்து வந்தன. விழாவின் 9வது நாளில் கன்னியா பூஜை நடந்தது. இப்பூஜையில் 9 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஏராளமான பெண்கள் பாதபூஜை செய்து வழிபட்டனர். அப்போது, குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடக்க வேண்டியும் பிரார்த்தனை செய்து கொண்டனர். இதில், லாடவரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.