விருதுநகர், பிப். 13: குழந்தை திருமணம் செய்து வைத்தல் மற்றும் ஆதரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் பெண் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பரித்து அவர்களின் நல்வாழ்வை அச்சுறுத்துகிறது. இளம் வயது கர்ப்பத்தினால் மகப்பேறு காலத்தில் குழந்தை அல்லது தாய் இறந்துபோதல் போன்ற நிகழ்வு ஏற்படும், குழந்தை ஊனமாக பிறத்தல், அந்த பெண்ணின் உள் உறுப்புக்கள் பலம் இழந்து போவது, குழந்தையின் கல்வி தடைபடுவது, குடும்ப வன்முறைக்கு ஆளாகுவது போன்றவை ஏற்படும். எனவே, பெண் குழந்தைகளுக்கு 18வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இச்சட்டத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. குழந்தை திருமணம் நடத்தி வைத்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,00,000 அபராதமும் விதிக்கப்படும். திருமண மண்டப உரிமையாளர்கள், வழிபாட்டு தலங்களில் உள்ள அறநிலைத்துறை அதிகாரிகள் தங்கள் கோவில்களில் மற்றும் மண்டபங்களில் திருமணம் நடைபெறும் முன்பே மணமக்களின் திருமண வயது பூர்த்தி அடைந்திருக்கிறதா என்று சரிபார்த்த பின்னரே, திருமணத்திற்கு அனுமதி வழங்கவேண்டும். குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக தகவல் தெரியவந்தால், குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் பெண்கள் உதவி எண் 181 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிகளிடமும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விபரம் வெளியிடப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.