பேரணாம்பட்டு, அக்.5: பேரணாம்பட்டு அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உட்பட 2 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பார்த்திபன் என்பவரது மகன் அர்ஷன்(3) நேற்று காலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வெறிநாய் அர்ஷனை திடீரென கடித்து குதறியது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நாயை விரட்டியடித்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து முகம் மற்றும் கை, காலில் காயம் ஏற்பட்ட குழந்தையை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குழந்தையை கடித்த நாய் ஒரு மணி நேரத்தில் அதே பகுதியில் நூலகத்தில் பணிபுரியும் குழந்தையின் உறவினரான சுப்பிரமணி(48) என்பவரையும் கடித்து குதறியது. இதில் அவருக்கு கை, கால் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட அப்பகுதியினர் நாயை விரட்டி அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் அந்த வெறிநாய் அதேபகுதியில் உள்ள ஒரு பசு மாட்டையும் கடித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, எழிலரசி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பேரணாம்பட்டு பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளால் இதனை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தை உட்பட 2 பேரை அடுத்தடுத்து நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.