ஈரோடு,மே30: கோபி அருகே உள்ள லக்கம்பட்டி, காலேஜ் காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா(23). இவர், திங்களூர் அருகே உள்ள அப்பிச்சிமார் மடம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. லாவண்யாவால் குழந்தையை சரிவர பராமரிக்க முடியாத காரணத்தால் வேலைக்கு செல்லவேண்டாம் என சின்னராஜ் கூறியுள்ளார். கடந்த 23ம் தேதி லாவண்யா குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச ஆப் என வந்துள்ளது.
இதையடுத்து சின்னராஜ், உறவினர்கள் உதவியுடன் லாவண்யாவை தேடி வந்தார்.அப்போது,வெட்டையன் கிணறு பகுதியைச் சேர்ந்த சிவசக்தி என்பவருடன் லாவண்யா அடிக்கடி போனில் பேசி வந்ததும், சிவசக்தியும் வீட்டில் இல்லாததால் லாவண்யா அவருடன் சென்றிருக்கலாம் என்றும் சின்னராஜ் சந்தேகித்தார். இதையடுத்து சின்னராஜ், கோபி போலீசில் நேற்று முன் தினம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையுடன் மாயமான லாவண்யாவை தேடி வருகின்றனர்.