கடலூர், ஆக. 23: கடலூர் முதுநகர் அருகே உள்ள மணக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு நாலரை வயதில் ஆர்த்தி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று ஆர்த்தி அதிகமாக சேட்டை செய்து, அடங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, தனது குழந்தையின் கை, கால்களை கட்டி போட்டு உள்ளார். இதை பார்த்த குமாரசாமியின் பக்கத்து வீட்டுக்காரரான பாலு மகன் அசோக் (38) என்பவர், குமாரசாமியிடம் சென்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் குமாரசாமி மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோர், அசோக்கை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதை தட்டி கேட்க வந்த அசோக்கின் தம்பி பாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோரையும் குமாரசாமி ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதில் அசோக்குக்கு இடது கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாஸ்கர் மற்றும் ஆனந்திக்கு கால், கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் அசோக் புகார் செய்தார். புகாரின் பேரில் குமாரசாமி மற்றும் சந்தியா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.