Tuesday, March 25, 2025
Home » குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!

குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்மாத்தி யோசிகுழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம். அதற்கென நவீன சிகிச்சைகளும், ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளும் பெருகி வருகின்றன. குழந்தையின்மை சிகிச்சை என்றாலே அலோபதிதானா? சித்த மருத்துவத்திலும் அதற்கென சிறப்பான சிகிச்சைகள் உண்டு என்கிறார் ஈரோடு அருள் சித்தாகேர் சித்த மருத்துவமனையின் நிறுவனரான அருள் நாகலிங்கம்.சித்த மருத்துவத்துக்கும், குழந்தையின்மைக்கும் என்ன தொடர்பு என்று அவரிடம் விரிவாகக் கேட்டோம்…‘‘மன அழுத்தம் எனும் பெரிய ராட்சசன் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைக்கிறது என கூறும் அளவிற்கு இளைஞர்கள்மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனது இன்றைய அளவில் மிகவும் குறைந்து வருகிறது. முதல் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிஜங்களையும், ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ளும் மனது இருப்பதில்லை. இதுவே மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கிறது. சிறு சிறு ஏமாற்றங்கள் கூட இவர்களுக்கு ஏமாற்றங்களை தந்து பெரிய அளவில் மன அழுத்தத்தில் கொண்டு போய்விடுகிறது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நம் தமிழ் உணவுமுறை மாறி, இன்று மருந்து மட்டுமே உணவாகிவிட்டது. முன்பு நாம் உண்ணும் உணவிலேயே மருந்தும் கலந்து இருந்தது. பல நாட்டு மக்கள் இன்றும் நம் தமிழரின் உணவுமுறையை கண்டு வியந்து கொண்டு இருக்கின்றனர். இதற்கு காரணம் நம் உணவிலே நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து பொருட்கள். அன்றாடம் நாம் எடுத்து கொள்ளும் ரசம் கூட வெளிநாட்டவர்களுக்கு அதிசயமே, அதற்கு காரணம் ரசத்தில் உள்ள மருந்து தன்மையே. இது போன்ற சிறு உணவில் கூட நம் முன்னோர்கள் வெகு கவனமாய் இருந்தார்கள். இன்று துரித உணவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது. ஊட்டச்சத்து ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர். இந்த ஹார்மோன் மாற்றங்கள் நாம் உண்ணும் உணவினால் இயல்பாகவே நடந்து விடுகிறது. அதிக உடல் எடையும் முக்கியமான காரணியாக திகழ்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும். பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிராக்கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச்சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.இந்த அதிகமான உடல் எடை தைராய்டின் காரணமாக கூட இருக்கலாம்.இந்த நோயை குணப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடற்பயிற்சியின் மூலமாகவும் இந்த குறையை சரி செய்யலாம். உணவில் சரிசமவிகித பழவகைகளையும் கீரைகளை கொண்டும் குணமாக்கலாம். சித்த மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது நிரந்தரத் தீர்வாக அமைகிறது. இதற்கு தொடர் சிகிச்சை தேவைப்படும். அதிகபட்சமாக ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலே போதுமானது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது சாலச் சிறந்தது. இன்று வேகமாக வளர்ந்து வரும் சித்த மற்றும் மூலிகை மருத்துவத்தில் பாதிப்புகளை அதிநவீன ரத்த பரிசோதனை கண்டுபிடிப்பின் மூலம் கண்டறிந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் முற்றிலும் குணமாக்கிக் கொள்ளலாம். மேலும் சித்த மருத்துவத்தின் மூலம் பிறக்கக் கூடிய குழந்தை அறிவு, நலம், உடல்நலம் நல் உணர்வு நலம் நிறைந்த குழந்தைப்பேறு கிடைக்கும்’’ என்கிறார் அருள் நாகலிங்கம்.சித்த மருத்துவர் யாழினியிடம் இதுபற்றிப் பேசினோம்…‘‘பெண்ணின் கருப்பையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆணின் விந்துக்காக காத்திருக்கும். விந்து வந்து தன்னை அடையாத பொழுது அந்த கருமுட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும். இதையே நாம் மாதவிடாய் என்கிறோம்.28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே. இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும். இதில் 3 முதல் 5 நாட்கள் ரத்தப்போக்கு இருப்பது இயல்பான சுழற்சி. மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறும்.சராசரியாக மாதவிடாய் நாட்களில் வெளியேறும் ரத்தத்தில் 25% முதல் 40% வரையில் மட்டுமே ரத்தம் முதல் நாளில் வெளியேறும். இரண்டாம் நாள் 80% ரத்தம் வெளியேறும். பின்பு மூன்று மற்றும் அதன் பின் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். இரண்டாம் நாளில் இருந்து வெளியேறும் ரத்தம் ரத்த சிவப்பிலே இருக்கும். இதுவே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் வருவதும் உண்டு, இது இயல்புக்கு மாறுபட்டாலும் சில மருத்துவர்கள் இதை நல்ல மாதவிடாய் சுழற்சி என ஏற்று கொள்கிறார்கள். விந்துக்கு காத்திருக்கும் முட்டை விந்து வந்தடையாத பொழுது உடைந்து வெளியேறிவிட வேண்டும், இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து. அப்படி வெளியேற கால தாமதம் ஆகும் பெண்ணிற்கு மாதவிடாய் கோளாறு இருப்பதாய் அறியலாம். பி.சி.ஓ.டி (PCOD) என மிகச் சாதாரணமாக அழைக்கப்படும் `பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’(Polycystic Ovarian Disease) நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. இந்த நோயை அசோக மரப்பட்டை உள்ளிட்ட சில மூலிகைகளால் குணப்படுத்த முடியும். பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்பது பெரும்பாலும் பூப்பெய்திய பெண்களையே பாதிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 15 வயதுக்குமேல் 45 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இப்பிரச்னை வருகிறது. இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பெண்கள் PCOD-யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஓர் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த நோயை முழுமையாகச் சரி செய்யலாம்.அழகுக்காக வளர்க்கப்படும் அசோகா மரப்பட்டைப் பொடி 5 கிராம் எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலை, மாலை சாப்பிட வேண்டும். இதை இரண்டு மாதம் தொடர்ந்து அருந்தினால் `பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்’ சரியாகும். அத்துடன் கருப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் இது சரி செய்யும். இது, கருப்பைக்கு டானிக் போன்றது. எனவே இதை, ‘பெண்களின் மருந்து’ என்றும் அழைக்கிறார்கள். எங்களது சித்தா மருத்துவமனையில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அவர்களின் குறைகளை கண்டறிந்து அதற்கேற்ப மூலிகை மருந்துகளை கொடுத்து 100 சதவீதம் குழந்தைப்பேறு ஏற்படுத்தி கொடுக்க முடியும்’’ என்கிறார். சன்மார்க்க மருத்துவர் கருணாநிதியுடன் பேசினோம்… ‘‘கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையின்மை என்ற பிரச்னை நமது நாட்டில் எங்கோ அரிதாக இருந்து வந்தது. ஆனால், தற்போது குழந்தையின்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உரங்களால் வளரும் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இவற்றால் நமது நாட்டு மக்களின் உடம்பு நஞ்சாகி கொண்டிருக்கிறது. எந்த உணவும் உடம்புக்கு மட்டும் சக்தி தருவதில்லை. மனதிற்கும் சக்தி தருகிறது. அதுபோல பொருந்தாத உணவுகள் உடம்பையும், மனதையும் பாதிக்கின்றன. மிளகாயை அதிகமாக உண்டால் வயிற்றுப்புண், மூலம் முதலான உடல், நோய்களும் அடிக்கடி தேவையில்லாமல் கோபப்படுதல் என்ற மனநோயும் உண்டாகவில்லையா? செயற்கை நஞ்சுகள் உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றின் துணையால் விளைந்த உணவுகளை உண்டு வாழும் மனிதர்களின் உடம்பும், மனமும் இயற்கையான உடல்நலம் ஆகியவற்றை பெற்றிருக்குமா? அதே சமயம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றில் கழிவுகளில் இருந்து பரவும் மின் கதிர்வீச்சுகள் உடல், மன நலன்களை அழித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். செல்போன் அலைகள் பரவுவதால் பல பறவைகள் அழிந்து கொண்டு இருப்பதே இதற்கு போதுமான சான்றாகும். குழந்தைகள் பிறந்தாலும் உடல், மன நலன்கள் இல்லாமல் குழந்தைகள் பிறக்கிறது. சில குழந்தைகள் ஆட்டிசம் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகின்றன. குழந்தையின்மை பிரச்னைக்கு சிறந்த மூலிகை மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கலாம். மூலிகை மருந்துகள் குழந்தையில்லா தம்பதிகளின் உடம்பில் உள்ள நஞ்சுகளை அகற்றுகிறது. உடல் நலத்தையும், மனநலத்தையும் உருவாக்குகிறது. கருத்தரித்த பிறகும் நாங்கள் தரும் மருந்துகள் கருவை உடல், மனநலன்கள் சார்ந்த குழந்தையாக உருவாகி பிறக்க உதவுகிறது. சித்த மருந்துகள் அனைத்தும் மனிதர்களின் திறமையால் உருவானவை அல்ல. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாலும், எங்களது குரு திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அருளால் திருமூலர், அகத்தியர் முதலான சித்தர்களின் ஆசியாலும் உருவானவை. சைவ உணவை மேற்கொண்டு மூலிகை மருந்துகளை பயன்படுத்திய பல தம்பதிகள் அறிவும், அழகும் பொருந்திய குழந்தையை பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்’’ என்கிறார்.– என்.செந்தில்குமார்படங்கள்: ஜோசப் ஆரோக்கிய இன்பராஜா

You may also like

Leave a Comment

five + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi