Wednesday, May 22, 2024
Home » குழந்தைகள் பத்திரம்-ஒரு ஷாக் ரிப்போர்ட்

குழந்தைகள் பத்திரம்-ஒரு ஷாக் ரிப்போர்ட்

by kannappan

நன்றி குங்குமம் தோழிகந்தல் ஆடை, அழுக்கேறிய உடல், பசியில் அப்பிய கண்கள் என கையேந்தும் குழந்தைகளை பார்த்தால் நம்மை அறியாமல் காசை எடுத்துப் போடத் தொடங்குவோம். ஆனால் பிச்சை எடுக்கும் இந்தக் குழந்தைகளுக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் இதுதான் உண்மை.சாலைகள், கோவில்கள், மக்கள் கூடும் இடங்கள், பீச், மிகப் பெரிய மால்கள் வாயில் என பிச்சை கேட்டு பின் தொடரும் குழந்தைகளையும்.. உறக்க நிலையிலேயே குழந்தை இருக்க, அந்தக் குழந்தையை வைத்து பிச்சை கேட்கும் பெண்களும் நம் அன்றாட வாழ்வில் பழகிப்போன காட்சிகள். கைகளை நம்மை நோக்கி நீட்டி பிச்சை எடுக்கும் இவர்கள் யார்..? எங்கிருந்து வருகிறார்கள்..? இவர்களைப் பிச்சை எடுக்கத் தூண்டுவது யார்? என்ற கேள்விகளுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பிச்சை எடுக்கும் குழந்தைகளை தடுத்தல் என்று இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஆல் இந்தியா மூவ்மென்ட் பார் சர்வீஸ்’ (AIMS) என்கிற தன்னார்வ அமைப்பின் இணை நிறுவனரும் அதன் செயலாளருமான கன்யா பாபுவை சந்தித்தபோது…‘‘நம் எல்லோருக்கும் காலைப் பொழுதென்பது ஒரு அழகான விடியல். அதில் குயில் கூவும்.. பறவைகள் கிறீச்சிடும்.. சூரியன் லேசாய் எட்டிப் பார்க்கும்.. தென்றல் இதமாய் நம்மை வருடிச் செல்லும்.. இவைகளை ரசித்துக்கொண்டே நாம் நடை பயிற்சி செய்வோம். ஆனால் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் விடியல் ரொம்பவே கொடுமையானது. அவர்களை அடிப்பது, துன்புறுத்துவது, ஏரியாக்களில் பிச்சைக்காக இறக்கிவிடுவது என ஒவ்வொரு விடியலுமே மிகவும் போராட்டமாக இருக்கும்.காலை 7 மணியில் தொடங்கி 7:30 மணிக்குள் பிச்சை எடுப்பதற்காக, பல இடங்களில் குழந்தைகள் பிரித்து விடப்படுகிறார்கள்.  ஒவ்வொரு குழந்தைக்குப் பின்னும் குண்டாஸ் எனப்படும் அடியாட்கள் கட்டாயம் இருப்பார்கள். குழந்தையால் அவர்களின் டார்கெட்டை அடைய முடியவில்லை என்றால் கட்டாயம் அவர்களுக்கு அடி விழும். சாப்பாடு கிடைக்காது. சிலர் குழந்தைகளை ஊனம் செய்தும் பிச்சை எடுக்கவைக்கப்படுகிறார்கள். ‘அப்பா இல்லை’ ‘அம்மா இல்லை’ ‘பசிக்கிது’ என இரண்டு மூன்று டயலாக் மட்டுமே மாற்றி மாற்றி சொல்ல வைப்பார்கள்.பெரும்பாலும் இந்தக் குழந்தைகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வடமாநிலக் குழந்தைகள் தென் மாநிலங்களிலும், தென்மாநிலக் குழந்தைகள் வடமாநிலங்களுக்கும் பிச்சை எடுக்க கடத்தப்படுகிறார்கள். ஒரு குழந்தை நாள் ஒன்றுக்கு 200 ரூபாயினை பிச்சையாக அவர்களுக்கு சம்பாதித்து தரவேண்டும். இதில் 2000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றால் ஒரு நாள் வருமானம் 4 லட்சம். ஒரு மாதத்திற்கு ஒரு கோடியே இருபது லட்சம், இதுவே வருடத்திற்கு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் கடத்தப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக புள்ளி விபரம் சொல்கிறது. முதலீடே இல்லாமல் மிகப் பெரிய நெட்வெர்க்கில் பில்லியன் மற்றும் டிரில்லியனில் பணம் கொழிக்கும் தொழிலாக பிச்சை எடுக்கும் தொழில் இருந்து வருகிறது. நிறைய இடங்களில் ஒரு அம்மா கைக்குழந்தையை தன் மடியில் தொங்கவிட்டு, குழந்தைக்கு பால் வாங்க காசு வேண்டும் எனக் கேட்பார். அந்தக் குழந்தை தூங்கிக்கொண்டே இருக்கும். நாம் அந்தக் குழந்தை பசி மயக்கத்தில் இருக்கிறதென நினைப்போம். குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையிலேயே இருக்க வைக்கப்படும். நீங்கள் குழந்தைகள் மீது பாவப்பட்டும், இறக்கப்பட்டும் போடும் காசு குழந்தைக்குப் பின்னால் இருந்து செயல்படுபவர்களுக்கே நேரடியாகப் போய் சேருகிறது. நம் இறக்கத்தை அவர்கள் பணமாக்குகிறார்கள். நம் பலவீனத்தை அவர்கள் பலப்படுத்திக்கொள்கிறார்கள். பாவப்பட்டு நீங்கள் போடும் பிச்சைக்குப் பின்னால் எத்தனை பெரிய சதியும், வலை பின்னலும் இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா.?மனம் இறங்கி நீங்கள் போடும் பிச்சைதான் இதன் பேஸ் லைன். இரக்கப்பட்டு குழந்தைக்கு பிச்சை போடுவதால் நீங்கள் மனிதநேயமற்றவர்களாக மாறுகிறீர்கள். விளைவு, நிறைய குழந்தைகள் தினம் தினம் கடத்தப்படுகிறார்கள். நீங்கள் பரிதாபப்பட்டு போடும் ஒரு ரூபாய் எத்தனை பெரிய விளைவை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பது இப்போது புரிகிறதா.?ஒரு குழந்தை ஒரு இடத்தில் பிச்சை எடுக்கிறது என்றால் அந்தக் குழந்தைக்குப் பின்னால் மூன்று முதல் நான்கு அடியாட்கள் அல்லது குண்டாஸ் இருப்பார்கள். அவர்கள் பலூன் விற்பவர்களாகவோ, சோம்பப்புடி விற்பவர்களாகவோ வேறு தொழில் செய்பவர்களாக அந்த குழந்தைக்கு அருகாமையிலேயே நடமாடுவார்கள். அவர்கள் எல்லாம் இந்த வலைப்பின்னலில் உள்ள அடியாட்கள் அல்லது முகவர்கள். அவர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள்தான் இந்தக் குழந்தைகள் இருக்கும்.சில திரைப் படங்களில் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் உண்மை யைத் தழுவி  எடுக்கப் பட்டவையே.குஜராத்தில் உள்ள வடோதரா என்ற இடத்தில் காணாமல் போன குழந்தை இருப்பதாக அறிந்து, காவல்துறை உதவியோடு குழந்தையின் அப்பா, எங்கள் அமைப்பில் இருந்து சில நண்பர்கள், மற்றும் சில தன்னார்வலர்கள் இணைந்து வடோதரா நோக்கி சென்றோம்.ஒரு குழந்தையினை தேடிச் சென்றால், சென்ற இடத்தில் எங்களுக்கு பல அதிர்ச்சிகரமான விசயங்கள் காத்திருந்தது. இரண்டாயிரம் குழந்தைகளை ஒரு சின்ன டெம்போவில் மந்தை மந்தையாக ஏற்றி ஒரு கிலோ மீட்டருக்கு 4 முதல் 6 குழந்தைகள் மற்றும் அந்தக் குழந்தைகளோடு இரண்டு மூன்று குண்டாஸ்களையும் இறக்கிவிட்டார்கள்.குழந்தைகள் பிச்சை எடுப்பதை இந்த குண்டாஸ்கள் அருகில் இருந்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த குண்டாஸ்களை மீறி அந்தக் குழந்தைகளை எளிதில் நெருங்கவோ பேசவோ எங்களால் முடியவில்லை.தீவிரமாக உள்ளே போகப்போக அந்த நெட்வொர்க் எங்களை மிரட்டியது. எங்கள் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்தோம். பகிரப்பட்ட புகைப்படத்தில் இருந்த குழந்தையையும் நாங்கள் பார்த்துவிட்டோம். ஆனால் துரதிர்ஷ்டமாக காணாமல்போன குழந்தை அதுவல்ல என உறுதியானது. குஜராத் மாநிலத்தில் இந்த குழந்தை கடத்தல் நெட்வொர்க் மாஸாக செயல்படுகிறது.அதன் பிறகே சென்னையில் குழந்தைகள் மற்றும் குழந்தையோடு பிச்சை எடுப்பவர்களைத் தடுக்க எங்கள் அமைப்பின் மூலமாகத் தீவிரமாகக் களத்தில் இறங்கினோம். காவல்துறையும் எங்களுக்கு  நிறைய உதவினார்கள். ஒரு முறை சேத்துப்பட்டு சிக்னலில் ஒரு அம்மா கையில் வைத்திருந்த குழந்தையை சந்தேகப்பட்டு, குழந்தை அழகாக இருக்கு எனச் சொல்லிவிட்டு போட்டோ எடுக்க முனைந்தேன். அப்போது அந்த அம்மாவைச் சுற்றிலும் ஒருவர் இருவர் என ஆட்கள் கூடிக்கொண்டே சென்றார்கள். ‘போட்டோ எடுக்காதீங்க..’ என என்னிடம் பிரச்சனை பண்ணத் தொடங்கியவர்கள், எதுவாக இருந்தாலும் எங்க அண்ணனிடம் பேசுங்க என ஒரு விசிட்டிங் கார்டைக் காட்டினார்கள். ‘நான் ஏன் உங்க அண்ணனிடம் பேசனும், அவரை என்னை வந்து பார்த்து பேசச் சொல்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குழந்தையோடு அந்த பெண் அங்கிருந்து மெதுவாக நகர்த்தப்பட்டார். என்னைச் சுற்றிலும் நின்ற குண்டாஸ் ஆட்களும் ஒவ்வொருவராக நகர்ந்தார்கள். நான் அங்கிருந்து தப்பித்து வரும் நிலை ஏற்பட்டது.ஒரு நாள் மெரினாக் கடற்கரையில் பிச்சை எடுத்த குழந்தையிடம் பேசியபோது, அந்தக் குழந்தை வேறு மாநிலத்தில் இருந்து சென்னை வந்துள்ளது தெரிய வந்தது. குழந்தைக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெற்றோர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் வரை அவர்கள்தான் குழந்தையின் அம்மா-அப்பா. சில குழந்தைகளுக்கு மாமாவும் உண்டு. அவர்தான் குழந்தையின் ஏஜென்டாக செயல்படுபவர்.  குறிப்பிட்ட குழந்தை எங்கு இருக்க வேண்டும் அடுத்து எங்கு போகவேண்டும் என்பதை மாமாதான் முடிவு செய்வார். தன்னுடைய கலெக் ஷன் கூடுதலாக இல்லையென்றால் மாமா அடிப்பார் எனவும் குழந்தையிடம் இருந்து பதில் வந்தது.வருமையின் காரணமாகவும் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் தாங்களாகவே ஈடுபடுத்துகிறார்கள். 200 ரூபாய் கொடுத்தால் குழந்தை வாடகைக்கு கிடைக்கும். காலையில் வாடகைக்கு எடுத்து, பிச்சை எடுத்துவிட்டு மாலையில் பெற்றோரிடத்தில் 200 ரூபாயுடன் குழந்தையை ஒப்படைக்கிறார்கள். சமீபத்தில் சரவணா ஸ்டோர் வாசலில் பிச்சை எடுத்த 15 குழந்தைகளைக் காப்பாற்றி உடை, உணவு, படிக்க புத்தகம், காலணி என உதவி செய்தோம். முதலில் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். பிச்சை போடுவதால் இந்த தொழில் ஒழியாது. நீங்கள் பிச்சை போடத் தொடங்கினால் நாளை நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் இந்த நிலை ஏற்படும். பிச்சை எடுப்பதை தடுத்தல் சட்டம் 1945ன் படி (prevention of begging act 1945) பிச்சை எடுத்தல் குற்றம். பிச்சை எடுப்பது குற்றம் என்றால் ஏன் பிச்சை போட வேண்டும்..? முதலில் இரக்கப்பட்டு பிச்சை போடுவதை நிறுத்துங்கள். பிச்சை எடுக்கும் குழந்தை மீது சந்தேகம் வந்தாலோ, அல்லது ஒரு அம்மாவின் கையில் இருக்கும் குழந்தை சந்தேகப்படும்படி இருந்தாலோ உங்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்து முகநூலில் ‘நோ மோர் மிஸ்ஸிங்’ (No More Missing) என்று முகப்பு பக்கத்தில், எந்த இடத்தில் எத்தனை மணிக்கு எப்போது எடுத்தீர்கள் என்ற விபரங்களோடு புகைப்படத்தை பதிவேற்றுங்கள்.குழந்தை இருக்கும் புகைப்படம் இணையத்தில் இந்தியா முழுவதும் கண்டிப்பாக வலம் வரும். நீங்கள் பதிவேற்றிய புகைப்படம் காணாமல்போன குழந்தையாக இருக்கும் பட்சத்தில், யாராவது ஒருவர் அந்தப் புகைப்படத்தையும் குழந்தையின் விபரத்தையும் அறிந்து கண்டுபிடிக்கலாம். எல்லா மாநிலங்களிலும் இதில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து முடிந்தவரை இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றி உரியவர்களிடம் சேர்க்கும் முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். மேலும் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு (1098) போன் செய்யலாம். அவசர எண் 100ஐ அழைக்கலாம். இல்லையென்றால் CWC(child welfare committee) தொலைபேசி எண்களுக்கு போன் செய்து அவர்களை அழைக்கலாம். அல்லது நம்பத்தகுந்த தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்கலாம். இதை எல்லாம் நாம் செய்தால் குழந்தைகள் கட்டாயம் காப்பாற்றப்படுவர். ஒருசில நிமிடத்தை  குழந்தையின் எதிர்காலம் கருதி செலவு செய்தால் அந்தக் குழந்தையின் வாழ்க்கை காப்பாற்றப்படும்.குழந்தைகள் பலவீனமானவர்கள். அவர்களால் எதிர்ப்பு காட்டவோ, குற்றவாளிகளை அடையாளம் காட்டவோ முடியாது. அதனால்தான் குற்றவாளிகள் குழந்தைகளை குறி வைக்கிறார்கள். குழந்தைகள் கடத்தப்படுவது பிச்சை எடுப்பதற்கு மட்டுமல்ல. குழந்தை தொழிலாளர்களாக அவர்களை வேலை வாங்க, பெண் குழந்தை என்றால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, அழகான குழந்தை என்றால் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்க. இது தவிர ‘சைல்ட் போர்னோகிராபி’ எனப்படும் டார்க் வெப்சைட்டுகளுக்காகவும் குழந்தைகள் தினம் தினம் கடத்தப்படுகிறார்கள். இந்த வெப்சைட்களைப் பார்க்கவும், புரொமோட் செய்யவும் நிறைய திரைமறைவு ஆட்கள் இருக்கிறார்கள்.மீண்டும் சொல்கிறேன், குழந்தைகளுக்கு எந்தவிதமான பிரச்சனை என்றாலும் 1098 தொலைபேசிக்கு தகவல் சொன்னால், அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை உதவியோடு குழந்தையை காப்பாற்றி CWCல் ஒப்படைப்பார்கள்.நீங்கள் குறிப்பிடும் இடத்தை அவர்கள் வந்து சேரும்வரை அங்கேயே குழந்தைக்கு அருகில் இருந்து, குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள். குழந்தைகளின் விடியல் நல்ல விடியலாக அமைய வேண்டும் என்றால் நாமும் உதவி கரம் நீட்ட வேண்டும். வலி யாருக்கு வந்தாலும் அது வலிதான்’’ என்றார்.மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi