Saturday, July 12, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் குழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்

குழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழி சென்னையில் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் அசுத்தத்தை சுமந்து பயணிக்கும் கூவம் ஆற்றைக் கடக்காமல் யாரும் பயணித்திருக்க  முடியாது. ஆனால் அந்தக் கூவம் ஆற்றின் கரையோரங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றாமல் மூன்று தலைமுறை கடந்து பலர்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் பல வண்ணக் கனவுகள் இருக்கிறது. அந்தக்  குழந்தைகள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கிறார்களா? சுத்தமான காற்று, இருப்பிடம், குடிநீர், உணவு போன்றவை அவர்களுக்கு எளிதாய்  கிடைக்கிறதா? ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகில் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லைதான். சிலருக்கு தேவைக்கு  மீறியதாகவும், சிலருக்குத் தேவையான அடிப்படை வசதிகளுமே இல்லாத நிலையே இங்கு நிதர்சனம்.தமிழகத்தில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய் தாக்குதல் தீவிரமாய் பரவிவரும் நிலையில், அசுத்தங்களுக்கு நடுவே,  நடுங்கும் குளிர், மழை, வெயில், புயல் என அத்தனை அவஸ்தைகளையும் கடந்து, கூவம் ஆற்றின் கரையோரங்களில் வாழும் மக்களை  கடந்துதான் நாம் தினந்தோறும் பயணிக்கிறோம்.நிச்சயமற்ற தங்களின் தினக்கூலி வேலைக்கு நடுவே, வாழ்வாதாரத்திற்காய் போராடும்  இம்மக்களின் அவலம் நம் கண்களுக்கு தெரிந்த விசயம்தான்… அதில் ஒன்றுதான் சிறுவன் மணிகண்டனின் குடும்பம். சென்னை தியாகராய  நகரில் இயங்கும் செவித்திறன் குறை  மற்றும் வாய்பேச இயலாதோர் பள்ளியின் மழலையர் வகுப்பில் ஆசிரியராய் பணியாற்றும் புவனா  டீச்சர் தன்னிடம் பயிலும் மாணவன் மணிகண்டனைப் பற்றி நம்மிடம் இயல்பாய் பேசத் துவங்கினார்.‘‘எங்கள் பள்ளி சிறப்புக் குழந்தைகளுக்கானது என்பதால், ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற பயிற்சி எடுத்திருப்பார்கள்.  மழலையர் வகுப்பில் தொடங்கி குழந்தைக்கு விபரம் தெரிந்து சுயமாக இயங்கும் வரை பெற்றோரில் யாராவது ஒருவர் குழந்தையோடு  பள்ளி முடியும்வரை உடன் இருக்க வேண்டும். நாங்கள் எழுதிப்போடுவதை அப்படியே கரும்பலகையைப் பார்த்து எழுதி எடுத்துக்கொள்ள  வேண்டும். வகுப்பில்  பாடம் நடத்தும் முறையை கூடவே இருந்து கவனித்து, அப்படியே பின்பற்றி வீட்டிலும் அவர்களுக்கு பேச்சு மற்றும்  கற்றல் பயிற்சி கொடுக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு  நாங்களும் நிறையவே உதவுவோம். செவித்திறன் குறை  குழந்தைக்கு, ஒரு பறவையை உணர்த்த, எட்டு முதல் ஒன்பது வகையில் பயிற்சி வழங்குகிறோம்.பிறப்பிலேயே செவித்திறன் குறை மற்றும் வாய்பேச முடியாத மணிகண்டன் நரம்பியல் பிரச்சனையாலும் பாதிப்படைந்து, பென்சிலை  விரல்களால் சரியாகப் பிடித்து எழுதவோ, நேராய் நிமிர்ந்து நடக்கவோ முடியாத நிலையில் தள்ளாடியபடி பள்ளிக்கு நடந்து வருவான்.  ஆனால் வகுப்பில் அவன் சிறந்த மாணவன். ஆசிரியர் குறிப்பறிந்து நடப்பவன். ரொம்பவே அன்பாக நடந்துகொள்வான். பாடங்களை  ஊன்றிக் கவனிப்பான். ஆசிரியருக்கும் உதவியாகவும் இருப்பான். நான் பாடம் நடத்தும்போது அவன் கவனம் மொத்தமும் என் மீது  இருக்கும். அவன் கவனம் பாடத்தில் இருக்கிறதா என அறிய மணி.. வந்து இதை செய் என்றால் விடையை மிகவும் சரியாகச் செய்து  முடிப்பான். சிறப்புக் குழந்தையாக அவனது துறுதுறு பார்வை, பழகும் விதம், அவனது எல்லை மீறிய குறும்பு, படிப்பில் அவன் காட்டும்  அக்கறை இவற்றால் அவன்மீது எனக்கு கூடுதல் அக்கறையும், அன்பும் எப்போதும் உண்டு.வீட்டுப் பாடங்களைக் கொடுத்தால் ஒருநாள் கூடத் தவறாமல், சொல்லிக் கொடுத்ததை அப்படியே மிகவும் சரியாகச் செய்து எடுத்து  வருவான். ஒரு நாள் கூட அவன் படிப்பு விசயத்தில் தவறியதில்லை. ஆனால் அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். எங்கள்  பள்ளியில் மாணவணின் நிலையை அறிய ஆசிரியர்களுக்கு ‘ஹோம் விசிட்’ என்ற ஒரு திட்டம் உண்டு. அவனது உடல்நிலை அடிக்கடி  பாதிப்படைவதை அறிய மணிகண்டன் வீட்டிற்கு முதல்முறையாக ஹோம் விசிட் சென்றேன். அப்போது அவன் சூழல் என்னைப்  படுத்தியது. அன்றைய இரவெல்லாம் நான் தூங்கவில்லை. அவனது வீட்டின் ஓரம் குப்பைகளோடு நகரும் கூவம் ஆறு சாக்கடையாகத்  தேங்க,  வீட்டுக்கு முன்னால் உள்ள காவாயிலும் கூவம் ஆற்றின் சாக்கடை நீர் கீழே தேங்கி நின்றது. மொத்த வீட்டின் அளவு பத்து  அடிக்கு குறைவாகத்தான் இருக்கும்.அதில் அம்மா, அப்பா, அக்கா, பாட்டிகள் இருவர் என ஆறுபேர் கொண்ட குடும்பம் அது.மூன்று தலைமுறை கடந்து இங்கே இந்தக்  குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். மழை, வெள்ளம், புயல் என அனைத்திலும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அருகே  உள்ள சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து இரவைக் கழிக்கிறார்களாம். இல்லையெனில் அருகே உள்ள  மாநகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். மணிக்கு கல்வி வளர்ச்சிக்கான சரியான பின்புலம் இல்லை. ஊட்டச் சத்தான உணவு  இல்லை.  கழிப்பறை வசதிகள் கிடையாது. இரவு நேரங்களிலும், கூவம் ஆற்றை ஒட்டிதான் மலம், சிறுநீர் கழிக்கிறார்கள். சுகாதாரமான  காற்று, தண்ணி வசதி கிடையாது.  வீட்டை ஒட்டி மிக அருகில் உள்ள சுவற்றுக்கு மறுபக்கம் இடுகாடு வேறு உள்ளது. இடுகாட்டைத்  தாண்டிச்சென்று தண்ணீரை எடுத்து வருகிறார்கள். ஆரோக்கியத்திற்கான எந்த ஒரு சூழலும் அங்கு துளியும் இல்லை. அவன் உடல் நலம்  அடிக்கடி பாதிப்படைய காரணம் அவனது இருப்பிடச் சூழல்தான்.நாங்கள் பாடம் சொல்லித் தரும் முறையை பெற்றோர் அறிந்தால்தான் அவனிடம் பேசி விரைவில் மொழியைக்கொண்டுவர முடியும்.  மணியின் அப்பா ஒன்பதாவதுவரைதான் படித்துள்ளார். கிடைக்கும் வேலையை தினக் கூலியாகச் செய்கிறார். நான்காவதுவரை மட்டுமே  படித்த மணியின் அம்மா வீட்டு வேலை செய்பவர்.  ஆனால் இருவரும் இணைந்து குழந்தையை தினமும் படிக்க வைத்து, வீட்டுப்  பாடங்களை எழுத வைத்துத்தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.வீட்டு வேலை செய்யும் அம்மா எழுதி வருவதை, தினக்கூலி வேலைக்குச்  செல்லும் மணியின் அப்பா அப்படியே சொல்லித் தருகிறார். அதை வைத்து அவன் சமத்தாக மறுநாளுக்கான வீட்டுப் பாடத்தை எழுதி  வருகிறான். ஒரு நாள் கூட அவன் படிப்பு விசயத்தில் தவறியதில்லை. வீட்டுப் பாடம் செய்யாமல் கரண்ட் இல்லை, மழை வந்திருச்சு  இப்படி எல்லாம் எந்தக் காரணமும்  அவனிடம் இருந்து வந்ததில்லை.மணிகண்டன் அணிந்திருப்பது அரசு வழங்கிய காதுகேட்கும் கருவி. அது அவனுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. ஒரு நல்ல  ஹியரிங் எய்ட் வாங்க ஒரு காதுக்கு மட்டும் 25 ஆயிரம்வரை ஆகும்.  இரண்டு காதுக்கும் என்றால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  அவ்வளவு தொகைக்கு இவர்களால் எங்கே போகமுடியும்? செவித்திறன் குறையுடைய ஒரு சிறப்புக் குழந்தை, தரமான ஒலி வாங்கி  சாதனத்தை அணிந்து, நாங்கள் சொல்லித் தருவதை கவனித்துப் படிக்கின்றது என்றால் குழந்தை விரைவில் மொழியைக் கற்றுக்  கொள்ளும்.காசு கொடுத்தால்தான் இங்கு எல்லாமே தரமானதாக கிடைக்கும். காசு கொடுக்காமல் வாங்கும் இலவசங்களின் நிலை நாம்  அறிந்ததுதானே.      நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழல், விலையுயர்ந்த  காதுகேட்கும் கருவி இதெல்லாம் இருந்தால் இந்தக் குழந்தை இன்னும் நன்றாகப் படித்து  வெளியில் வருவான். மணியின் பிரச்சனை இதுதான்…  ஏழைகளுக்கு இங்கே என்ன கிடைக்கிறது..? வறுமையும், பசியையும் தவிர. இந்தக்  குழந்தையிடம் திறமை இருக்கு. குழந்தையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆர்வம் பெற்றோரிடம் இருக்கு. எல்லாமும் சரி.  ஆனால் மணிகண்டன் ஒரு சிறப்புக் குழந்தை என்பதால் சரியான முறையில் துல்லியமாகக் கேட்க,  படிக்க நல்ல காதுகேட்கும் சாதனம்  இருக்கிறதா?இலவசமாக அரசு தரும் தரம் குறைவான காதுகேட்கும் கருவியில் எல்லா ஒலியும் அவர்களுக்கு ஒரேமாதிரிதான் கேட்கும்.  நாம் பேசும் சத்தமும், பட்டாசு வெடிக்கும் சத்தமும் ஒரே மாதிரிதான் அவர்களின் செவிக்குள் போகும்.  அவர்களின் குறைபாட்டிற்கு ஏற்ற,  தரமான கருவிகளை பயன்படுத்தினால் மட்டுமே கற்றலில் சிறந்த குழந்தையாக வரமுடியும். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு அது  பயனுள்ளதாக இருக்கும்.ஐந்தில் வளைவதுதானே ஐம்பதில் வளையும். கற்க வேண்டிய இந்த வயதைக் கடந்து கற்றல்  குழந்தைக்கு சாத்தியமா? பிஞ்சில்  வளைத்தால்தானே வளரும்போது தன் குறைய மறந்து சிறந்த மாணவனாக வருவான்.மணியின் பெற்றோரால் விலையுயர்ந்த சாதனத்தை  வாங்க முடியாதுதான். மழை பெய்தால் இவர்களின் வாழ்வாதாரமே பாதிப்படையும். வீட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலை  செய்பவர்கள். நிலையான வருமானம் இவர்களுக்குக் கிடையாது. விலைவாசி உயர்வில் இந்தக் குடும்பங்களின் நிலை? இவர்கள் ஒரு  சாம்பிள்தான்…அரசு தரும் இலவச காதுகேட்கும் கருவியில் நாம் மணி என எவ்வளவு கத்திக் கூப்பிட்டாலும் அவன் திரும்பவே மாட்டான்  என்ற ஆசிரியர், நம்மை அவன் பெயரைச் சொல்லி அழைக்கச் சொல்ல… மிக அருகில் நின்றிருந்த மணி கடைசிவரை திரும்பவே இல்லை.  காது கேட்கும் சாதனத்தைப் பொருத்தி இருந்தாலும் அவனுக்குக் கேட்காது.அதுவே மிகவும் தரமானதாக இருந்தால், அதில் பயிற்சி எடுக்கும்போது, சரியான ஒலியை அவனைப் பெறவைக்க முடியும். வசதி நிறைந்த  பெற்றோர்கள்கூட தங்கள் குழந்தைக்கு சரியான முறையில்  பேட்டரி போடாமல் அனுப்புவார்கள். ஆனால் மணியின் பெற்றோர்  அதிலெல்லாம் மிகவும் சரியாக நடந்துகொள்வார்கள்.படிப்பில் மணிக்கு இருக்கும் ஆர்வத்திற்காகவும், அவனின் அன்பிற்காகவும், அவனது  சூழ்நிலை  அறிந்து அவன் படிப்பிற்கு ஆகும் செலவை நான்  செலுத்தி வருகிறேன்’’ என்றவர், வாய்ப்புகள் கிடைத்தால் இந்தக்  குழந்தைகளும் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்தான் என முடித்தார்.வீட்டுவேலை செய்யும் மணிகண்டனின் அம்மா  சகாயமேரியிடம் பேசியபோது…‘‘மணிக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே காதுகேட்கலை, வாய்பேச முடியாதுன்னு கண்டுபிடிச்சோம். நரம்பு பிரச்சனையில மூணு  மாதத்தில்  நிக்க வேண்டிய அவன் தலை பத்து மாதம் வரைக்கும் நிக்கல. அவன் நடக்க ஆரம்பிக்கவே ரெண்டரை வயசாச்சு. ஆரம்பத்தில  ரொம்ப தத்தக்கா புத்தக்கான்னு நடப்பான். வீட்டு வேலைக்கு நான் போயிருவேன். எங்க அம்மாதான் கொண்டுபோயி பள்ளியாண்ட  விடுவாங்க. சிறப்பு குழந்தைங்கிறதால அவனுக்கு என்ன சொல்லிக் கொடுக்குறாங்கன்னு எங்க அம்மாவால வந்து சொல்லத்தெரில.  அதுனால எங்க அம்மாவ வீட்டு வேலைக்கு அனுப்பிட்டு நான் மணியோட ஸ்கூலாண்ட போக ஆரம்பிச்சேன். மணிய ஸ்கூல்ல விட்டுட்டு  ஜெமினியாண்ட போயி ஒரு வீட்ல வீட்டு வேலை செஞ்சுட்டு, மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து டீச்சர் எழுதிப்போட்டுறுக்கத அப்படியே எழுதி  எடுத்துட்டு வந்து என் வீட்டுக்காரராண்ட கொடுப்பேன்.அவரு அப்படியே சொல்லிக் கொடுத்து மணிய படிக்க வச்சு, எழுத வச்சுருவாரு.எங்களாண்ட இருக்கோ இல்லையோ? சாப்புடுறமோ,  இல்லையோ? எனக்கு அவனத் தனியா விட்டுட்டு போகக் கூடாது, அவரும் புள்ளைய விட்டுட்டு போகாதன்னு சொல்லீட்டாரு. என்  வீட்டுக்காரு எல்லா வேலையும் செய்வாரு. காவா அடச்சாக்கூட எடுக்கப் போவாரு. என் புள்ளைக்கு ஒரு நல்ல காது கேக்குற மெஷின  வாங்கிக் கொடுக்கனும். நல்லா படிக்க வைக்கனும். அதுதான் எனக்கு மெயினு. புள்ளை நிறைய படிக்கனும், நிறைய பேசனும் அதுதான்  அவருக்கும் மெயினு.அரசு எங்களையெல்லாம் செம்மஞ்சேரி போகச் சொல்றாங்க. அங்கிருந்து வீட்டு வேலை செய்யப் போறது, கூலி  வேலைக்குப் போறதெல்லாம் ரொம்பவே கஷ்டம். சிட்டிக்குள்ளாற வரவே ரெண்டு மணி நேரம் ஆயிடும்.உடம்பு சரியில்லாத என் மகன் மணி படிக்கிற சிறப்பு பள்ளிக்கூடத்துக்கு அவனால் வரவே முடியாது. அவனோட படிப்பும் பாதியில நின்னு  போயிரும். பல்லவன் நகர்ல அரசு 322 பேருக்கு கொடுத்த வீடு இது. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்தே பதினெட்டு வருஷமாக  இங்கதான் இருக்கோம். சுனாமி, புயல் வந்தப்பையெல்லாம் எங்க வீடெல்லாம் மூழ்கிருச்சு. சாதாரண மழை வந்தாலே பறக்கும் ரயிலாண்ட  டேஷன்ல படுத்துக்குவோம். வீட்டிற்கு முன்னே ஓடுற காவா வழியா சாக்கடை தண்ணி வீட்டுக்குள்ளாற வந்துடும். பெரிய மழை வந்தால்  எங்களால் உள்ள வர முடியாது. நான்கு ஐந்து நாட்கள், ஒருவாரம் கூட ரயில் நிலையத்திலும் பள்ளிக்கூடத்திலும் இருப்போம்’’ என  முடித்தார்.குழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள் என்ற கவிஞர்  பாலபாரதியின் கவிதை வரிக்கு ஏற்ப, நவம்பர் மாதம் என்றால் நமக்கு நினைவுக்கு  வருவது குழந்தைகள் தினம்தான். நவம்பர் 14 குழந்தைகள் தினம். நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம். ஒவ்வோர் ஆண்டும் இங்கே  அது கடமைக்காகக்  கொண்டாடப்படுகிறது.  நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் இருப்பவர்கள் குழந்தைகளே. அனைத்துக்  குழந்தைகளும் அடிப்படை கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புடன் எல்லா உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள்தின  விழாவின் நோக்கம்.செயல்படுத்துமா இந்த அரசு..!?-மகேஸ்வரிபடங்கள்: ஆ.வின்சென்ட்பால்சக்தி,சமூக ஆர்வலர், சென்னைஇந்த மாதிரியான வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் படிக்காத பெற்றோர்களின், கூலித் தொழிலாளர்களின் சிறப்புக் குழந்தைகள்,  பள்ளிப்  படிப்பை முடித்து வெளியேறும் நிலையில், திரும்பவும் நாம் அவர்களைச் சந்திக்கும்போது ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத, படிக்கத்  தெரியாத நிலையிலே பலர் இருப்பர். அவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் இக்குழந்தைகள், திருட்டு மற்றும்  வேறுவிதமான சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர். பெண் குழந்தைகள் வறுமையால் வேறுமாதிரியான  சூழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.வேலைவாய்ப்பிற்காக இவர்கள் கஷ்டப்படாமல், பள்ளியில் படிக்கும்போதே கைத்தொழில் எதையாவது  கற்றுக்கொடுத்தால் சுயமாகத் தொழில் செய்து பிழைத்துக்கொள்வார்கள் என முடித்தார்.குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை…*    1989 ஆம் ஆண்டு நவம்பர் 20ல் ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் பலவும்  அங்கீகரித்து, ஐ.நா.சபை பொதுக்  குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் இந்தியா 1992ல் கையெழுத்திட்டுள்ளது.*    உலகம் முழுவதில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வு, உரிமைகளை பாதுகாக்க, மேம்படுத்த இவ்வுடன்படிக்கை  உருவாக்கப்பட்டது.*    உடன்படிக்கைபடி இனம், நிறம், பால், மதம், உடற்குறை, பிறப்பு அல்லது வேறு எந்த அடிப்படையிலும் வேறுபாடு காட்டாமல்,  குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கும் உத்திரவாதத்தை அனைத்து நாடுகளும் அளித்துள்ளன.*       ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்குவது, இலவசமாகக் கிடைக்கச் செய்வது. குழந்தைகள் தவறாமல் பள்ளி செல்ல ஊக்கம்  தருவதும் உடன்படிக்கையில் உள்ளது.*  மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், சமூகப் பணிகளில் பங்கேற்கும் சூழலையும். கௌரவமாக வாழும்  வாழ்க்கை உரிமையை வழங்கவும் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.* மாற்றுத் திறனாளி குழந்தை, சிறப்புக் குழந்தைகளுக்கு கூடுதலான பிரத்யேக கவனிப்பும் கேட்டு விண்ணப்பிக்கும் பெற்றோருக்கு  உதவிகள், குழந்தையின் சூழல், நிலை போன்றவற்றைக் கவனத்தில் கொள்வது. பெற்றோர் (அ) பாதுகாவலர் சூழ்நிலையைக் கவனத்தில்  கொள்வது. தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்பது உறுப்பு நாடுகளின் கடமை.*    பொருளாதார சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து, கல்வியில் குறுக்கிடும் தீங்கு தரும் பிரச்சனைகள்,  குழந்தையின் உடல் மற்றும் மன நலம், ஒழுக்கம், மேம்பாட்டிற்கு இடர் தரும் எந்தவொரு சூழலிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து, அவர்களின் உரிமையை வழங்க உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன….

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi