ஈரோடு, நவ.19: ஈரோட்டில் சாலையோர தற்காலிக கடைகளில் குளிர்கால ஆடைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் (பனி) காலமாகும். ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சமீப நாட்களாக இரவு நேரத்தில் லேசான குளிர் நிலவி வருகிறது. பனியின் காரணமாக ஸ்வட்டர், கம்பளி போர்வை, ஸ்கார்ப், குல்லா உள்ளிட்டவைகளை மக்கள் தேடி போய் வாங்கவும் துவங்கி விட்டனர்.
இதையொட்டி, ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் 10க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து குளிர்கால ஆடைகளை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இது குறித்து மீனாட்சி சுந்தரனார் சாலையில் குளிர்கால ஆடை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதி, காஷ்மீர் மாநிலத்தில் இருந்து கம்பளி, ஸ்வட்டர் போன்றவைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.
பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மாவட்டத்தில் குளிரும் குறைவாக உள்ளது. இருப்பினும் குளிர்கால சீசனை முன்னிட்டு ஸ்வட்டர், கம்பளி போன்றவற்றை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளோம். குழந்தைகளுக்கான ஸ்வட்டர் ரூ.250 முதல் ரூ.500 வரையிலும், பெரியவர்களுக்கான ஸ்வட்டர் ரூ.350 முதல் ரூ.450 வரையிலும் தலையில் கட்டும் ஸ்கார்ப் ரூ.30 முதல் ரூ.60 வரையிலும், சால்வை ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் கம்பளி போர்வை ரூ.300 முதல் ரூ.750 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.