குளித்தலை, செப்.4: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி பகுதி ஈரமான பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்து வந்ததால் குளித்தலை அடுத்த கோட்டைமேடு யூனியன் ஆபீஸ் நால் ரோடு அருகில் காட்டு கோவில் என சொல்லப்படும் செல்லாண்டியம்மன் கோவில் முன்பு நூறாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் சுற்றிலும் நிழல் தரும் பகுதியாக இருந்ததால் கிராம சபை கூட்டங்கள், கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியின் போது இந்த பழமை வாய்ந்த ஆலமரத்தின் அடியில் தான் இப்பகுதி கட்சி நிர்வாகிகளையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பெருமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். காரணம் இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி சுற்றி வயல்வெளிகள் சூழ்ந்து இருக்கிறது. இப்பகுதியில் விவசாயிகள் விவசாய பணிகளை முடித்துவிட்டு களைப்பாற இந்த ஆலமரத்து அடி பகுதி தான் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.