குளித்தலை, ஆக. 19: குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மாநில தலைமை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்டம் வரும் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்நிலையில் குளித்தலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மாநில தலைமை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் காலை உணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் நேற்று ஆய்வு செய்தார். தண்ணீர்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோட்டமேடு அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, வை.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
எழுநுற்றுமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கு கட்டப்பட்டுள்ள சமையலறைகள், பாத்திரங்கள், உணவுப் பொருள்கள், கேஸ் சிலிண்டர், அடுப்புகளை பார்வையிட்டார். ஆய்வின் போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பாகவும் தரமானதாகவும் தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலர், உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வை.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகளை அளவீடு செய்து கட்டப்பட்டுள்ள சிமென்ட் கலவை தரமானதாக உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் நபார்டு நிதியின் கீழ் ரூ. 2 கோடியே 73 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வாய்க்கால் பாலங்கள், ரூ.42.65 லட்சம் மதிப்பில் சிந்தலவாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.8.29 லட்சம் மதிப்பில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கோவக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடம், திருக்காம்புலியூர் ஊராட்சி மலைப்பட்டியில் ரூ.31.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட செயற்பொறியாளர் இளஞ்சேரன், குளித்தலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மணிமேகலை, ராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஒப்பந்தக்காரர்கள் உடனிருந்தனர்.