குளித்தலை, ஜூலை 7: கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லூரியின் முதல்வரும், பேராசிரியையுமான சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் 2025-26ம் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு உயர் கல்வித் துறை அறிவுத்தலின்பேரில் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் கல்லூரியில் காலியாக உள்ள அனைத்து பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து மாணவர் சேவை மையத்தை அணுகி விண்ணப்பம் செய்து காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளில் சேரலாம்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்க்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு கல்லூரி முதல்வரும், பேராசிரியையுமான சுஜாதா தெரிவித்துள்ளார்.