குளத்தூர், மே 29: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முடி திருத்தும் தொழிலாளி பலியானார். 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கருப்பசாமி(45). குளத்தூர் பஜார் வீதியில் சலூன் கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் 2மணிக்கு தூத்துக்குடியில் நடந்த திருமண விழாவிற்கு செல்வதற்காக கருப்பசாமி தனது நண்பரான பேச்சிமுத்து மகன் பாலமுருகன்(32) என்பவரது ஆட்டோவில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்றனர். ஆட்டோவை கருப்பசாமி ஓட்டியுள்ளார்.
அப்போது வேம்பாரைச் சேர்ந்த சூசை மகன் ஆரோக்கியராஜ் என்பவரும் கருப்பசாமியுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ வேப்பலோடையை அடுத்த கல்மேடு விலக்கு அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக திருச்செந்தூரிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி திருமுருகன் என்பவர் ஓட்டி வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ மற்றும் கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஆட்டோ உரிமையாளரான பாலமுருகன், ஆரோக்கியராஜ் மற்றும் காரில் வந்தவர்கள் என 8 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தருவைகுளம் போலீசார் பலத்த காயம் அடைந்த பாலமுருகன், ஆரோக்கியராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியான கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரில் வந்தவர்கள் சாயல்குடியில் முதலுதவி பெற்று முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.