காரியாபட்டி, ஆக.19: ஜோகில்பட்டி குளத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ராக்கம்மாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது ஜோகில்பட்டி தெப்பக்குளத்தில் நீண்ட நாட்களாக தாழ்வாக உள்ள மின் வயர்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். மேலும் ஜோகில்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.