அன்னூர், செப்.6: கோவை மாவட்டம் அன்னூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் அத்திக்கடவு சோதனை ஓட்டத்திலும் 50% முதல் 60% வரை நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் கோவை ரோட்டில் இருந்து தினசரி வரும் கழிவு நீர், குழாய் வழியாக வந்து குளத்து நீரில் கலக்கிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கழிவு நீர் குளத்தின் அடிப்பகுதியில் பெரிய அளவில் குழாய் பதித்து கலக்கப்பட்டு வருகிறது.
60 ஆண்டு காலம் போராட்டம் நடத்தி தற்போது தான் அத்திக்கடவு நீர் மற்றும் மழைநீரால் 60% வரை குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்துள்ளது. ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளன. எனவே விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.