குளச்சல், மே 25: குளச்சல் லியோன் நகர் பகுதியை சேர்ந்தவர் கெஜின் (42). இவரது மனைவி ஷீலா சிபி (40). சம்பவத்தன்று இவர், தனது மகள் ஹெரன் சாயி (11) என்பவருடன் பொருட்கள் வாங்க கடைக்கு கிளம்பினார். வீட்டில் இருந்து பாதி தூரம் சென்ற நிலையில் மழை பெய்தது. இதனால் குடையை எடுப்பதற்காக மகளை அந்த பகுதியில் சாலை ஓரம் ஒரு வீட்டின் அருகே நிற்க வைத்து விட்டு, ஷீலா சிபி குடையை எடுக்க வந்தார்.
ஹெரன் சாயி மட்டும் தனியாக நின்று கொண்டு இருந்தார். அப்போது மழையும் பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் வந்து, முகவரி கேட்பது போல் சிறுமியிடம் பேசினார். அப்போது திடீரென சிறுமி ஹெரன் சாயி கழுத்தில் கிடந்த ஒன்றே முக்கால் பவுன் தங்க செயினை பறித்து விட்டு பைக்கில் தப்பினார். அந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிறுமி கூச்சலிட்டார். ஆனால் மழை காரணமாக இந்த சத்தம் கேட்க வில்லை. குடையை எடுத்துக் கொண்டு வந்த ஷீலா சிபி, மகளிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.