உடன்குடி, ஜூன் 24: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சாய்ந்த நிலையில் உள்ள பனை மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டினத்தை மையமாக கொண்டு அனல்மின் நிலையம், நிலக்கரி இறங்குதள துறைமுகம், ராக்ெகட் ஏவுதளம் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் ஆன்மீக ஸ்தலமான முத்தாரம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பெரிய அளவில் அரிப்புகள் ஏற்பட்டு வனத்துறையினர் கடல் அரிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் வைத்திருந்த பனை மரங்கள், சவுக்கை மரங்கள் அலைகளின் தாக்கத்தால் சரிந்து விழுந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு பனை மரங்கள் சாய்ந்த நிலையில் எப்போது விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள பனை மரங்களை அப்புறப்படுத்துவதுடன் கடல் அரிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.