திருவண்ணாமலை, செப்.3: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களில் குற்றப்பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரம். எனவே, அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை மற்றும் ஆசிரம பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். அதுதவிர, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் மட்டும், வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான சாமியார்கள் இங்கு வந்து செல்கின்றனர். திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள், தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து சாமியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் சாமியார்களின் தேவைகள் பூர்த்தியாகிறது. எனவே, இங்கு தங்கியிருப்பதை சாமியார்கள் தங்களுக்கு பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
இந்நிலையில், ஆன்மிக நோக்கத்துடன் இங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப்பின்னணி உள்ளதால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கியிருக்கும் ஒரு சில சாமியார்களால் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருசிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிரிவல பக்தர்களிடம் தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, சாமியார்களின் விபரங்களையும், கைேரகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் ஏற்கனவே போலீசாரால் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களின் விபரங்களை சரிபார்த்து விசாரிக்கும் பணியில் நேற்று திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ சிவசங்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
சாமியார்களின் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, எதற்காக இங்கு தங்கியுள்ளனர்? எத்தனை காலமாக உள்ளனர்? போன்ற விபரங்கள் கேட்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட சாமியார்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சமீபத்தில் மேற்கு காவல் நிலையம் புதியதாக தொடங்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், அதன் மூலம், சாமியார்களின் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.