திருவாரூர் ஜுன் 25 : திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குற்ற செயல்களுக்கு திட்டம் தீட்டியாக கைது செய்யப்பட்ட 5 பேர்களில் இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி கருண்கரட் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 19ந் தேதி வலங்கைமான் போலீஸ் சரகத்திற்குட்பட்ட குடமுருட்டி பாலம் அருகே சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த 7 பேர்களை விசாரித்த போது அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்த நிலையில் குற்றசம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து வலங்கைமான் பாடகச்சேரியை சேர்ந்த பிரதீஷ் (29), முருகேஷ் (25), நடுவகளப்பால் பகுதியை சேர்ந்த ராகுல் (25), நீடாமங்கலம் நரசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) மற்றும் திருச்சி கல்லக்குடியை சேர்ந்த ஜான்பிரிட்டோ (39) மற்றும் லால்குடியை சேர்ந்த வினோத் (25) மற்றும் மாதவன் (26) ஆகிய 7 பேர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களில் ரவுடி பட்டியலில் இருந்து வரும் மாதவன் மற்றும் ராகுல் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எஸ்.பி கருண்கரட் பரிந்துரை செய்ததன் பேரில் இதற்கான உத்தரவினை கலெக்டர் மோகனசந்திரன் நேற்று வழங்கியதையடுத்து மேற்படி குற்றவாளிகள் இருவரும் நாகை கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி கருண்கரட் தெரிவித்துள்ளார்.