குலசேகரம், ஜூன் 24: குமரி மாவட்ட மலைப்பகுதிகள், மலையோர பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் சமீப காலமாக யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் குற்றியார் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் புகுந்த யானைகள் அந்தப் பகுதியில் மரங்களை நாசம் செய்தன. குடியிருப்பு வாசிகள் சத்தம் எழுப்பியதால் யானைகள் அங்கிருந்து சென்றுள்ளன. கடந்த வாரம் காலை நேரத்தில் அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டத்தில் புகுந்த யானை தொழிலாளி ஒருவரை தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தார். இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தொழில் பாதுகாப்பு வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குற்றியார் பகுதியில் புகுந்த யானை அந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோயில் வளாகத்தில் சென்று அங்கு உயரமாக அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சந்நிதி படிக்கட்டுகளை சேதப்படுத்தியுள்ளது. அதோடு அந்த பகுதியில் இருந்த பொருட்களை துவம்சம் செய்துள்ளது. அருகில் உள்ள தென்னை மரம் ஒன்றையும் சேதப்படுத்தி உள்ளது.
நேற்று காலை பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். நேற்று முழுவதும் பகல் பொழுதிலும் அருகில் உள்ள பகுதியில் யானை கூட்டம் முகாமிட்டு உள்ளது. அந்த பகுதி வழியாக சாலையில் செல்பவர்களை துரத்தி உள்ளது. யானைகளின் தொடர் அட்டகாசத்தால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பில் புகுந்த யானை
அருமனை: அருமனை சுற்றுவட்டார பகுதிகளான ஒரு நூறாம்வயல், புளிமூட்டு காலை குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி இந்த கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு நூறாம்வயல் கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்தன. பின்னர் இந்த யானை கிராமத்தில் உள்ள பலா மரங்கள், கமுக மரங்களை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதேபோல் அந்த யானை புளிமூட்டு காலை குடியிருப்பில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதாக அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். எனவே கிராமத்து குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே குற்றியாறு பகுதியில் ஒற்றை யானை ரப்பர் தோட்டத்தில் ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.