பெரம்பலூர், ஆக. 11: மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி போனில் மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் மற்றும் கிராம பொது மக்கள் திரண்டு வந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி இடம் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 8-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தங்க சண்முக சுந்தரம்(45). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று(10 ஆம்தேதி) தங்க சண்முக சுந்தரம் தலைமையில் துறைமங்கலம் ஔவையார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவியிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :
தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக தலைவராகவும், நகராட்சி கவுன்சிலராகவும் உள்ளேன். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளுக்காக பேசி தீர்வு கண்டு வருகிறேன். இந்நிலையில் எங்கள் தெருவைச் சேர்ந்த மாரியாயி என்கிற மகேஷ்வரி என்பவர் தனது கிரயம் பெறவுள்ள வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டதாகவும், அதனை அந்த நபர் மற்றொரு நபருக்கு ரூ.3 லட்சத்திற்கு (லீசுக்கு) ஒத்திக்கு விட்டு, நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும், இதனை கிராமத்தில் பேசி தீர்த்து வைக்கும்படி என்னிடமும் கிராம முக்கியஸ்தர்களிடமும் கேட்டுக்கொண்டதால் சம்மந்தப்பட்ட நபரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.
அவர் தனக்கு ஏற்பட்ட கவுரவ பிரச்னையாக நினைத்து பேச்சு வார்த்தைக்கு மறுத்து விட்டார். அதேநேரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எங்கள் மீது புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேல், கடந்த 9ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நடந்த சம்பவத்தைக் கூறியும், அதை கண்டு கொள்ளாமல் என்மீது வழக்குப்பதிவு செய்துவிடுவதாகவும், என்னை சிறையில் அடைப்பதாகவும், ரவுடி பட்டியலில் சேர்த்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே தங்கசண்முகசுந்தரம் தன்னை டிஎஸ்பி செல்போனில் பேசி மிரட்டிய ஆடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.