ஆண்டிபட்டி, ஜூலை 4: சாலையோரங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மெத்தைகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளி மாநில வியாபாரிகளும் மத்தளம் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வருவர்.அதுபோல் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தைகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் இருந்து தரம் குறைந்த துணிக்கழிவுகள் மற்றும் பஞ்சுகளை வாங்கி வந்து மெத்தைகளை தயாரிக்கின்றனர்.
இந்த மெத்தைகள் ரூ.800ல் துவங்கி 1000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவு என்பதால் பொதுமக்களும் ஆர்வமுடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர். உரிய அளவுகளை பின்பற்றாமல் பஞ்சு மற்றும் துணிகள் திணிக்கப்படுவதால் மெத்தை சமமான பரப்பில் இருப்பதில்லை. இதில் படுக்கும்போது முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் உடல் உஷ்ணம் போன்றவை ஏற்படுமென்றும், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் உள்ள மெத்தைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டுமென்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.