கள்ளக்குறிச்சி, நவ. 27: குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக கூறி நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி எம்ஜிஆர் நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அமனுல்லா (44). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஒரு தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவருக்கு குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதனை மாத தவணையாக ரூ.8,330 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கடன் பெறுவதற்கான வழிமுறையை அமனுல்லா கேட்டபோது கடன் பெற டாக்குமெண்ட் கட்டணம், ஜிஎஸ்டி, கமிஷன் தொகை என பல்வேறு காரணங்கள் கூறி பணம் கேட்டதாகவும், அதனை நம்பி அமனுல்லா போன் மூலமாக முதலில் ரூ.2,000 அனுப்பியுள்ளார். இதையடுத்து மாற்று போன் நம்பர் என 7 போன் நம்பர்கள் மூலமாக தொடர்பு கொண்டு அமனுல்லாவிடம் பேசியதை நம்பி 31 தவணையாக ரூ.3 லட்சத்து 850 பணத்தை போன் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் கடன் தொகை ரூ.5 லட்சம் வழங்காமல், மேலும் அந்த நபர்கள் ரூ.37 ஆயிரம் பணம் அனுப்பினால் தான் கடன் கொடுக்க முடியும் என வற்புறுத்தியதால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன வேதனையடைந்த அமனுல்லா கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் சந்திரலேகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அமனுல்லாவிடம் தொடர்பு கொண்ட செல்போன் நம்பர் விவரங்களை சேகரித்ததில் அசாம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் தொடர்பு கொண்டு நூதன முறையில் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து கடன் கொடுப்பதாக மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.