திருவாரூர், ஆக. 6: திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச மாதஓய்வூதியமாக ரூ 6 ஆயிரத்து 750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும், மருத்துவ படி மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும்,
ஈம கிரியை தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முருகையன், மாவட்ட செயலாளர் அம்புஜம் உள்பட ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.