மயிலாடுதுறை,ஆக.13: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 68 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 45 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 37 மனுக்களும், புகார் தொடர்பாக 18 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 14 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 46 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 7 மனுக்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 42 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 16 மனுக்களும் மொத்தம் 293 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், குத்தாலம் வட்டம் கோமல் ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சேகர் என்பவரின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான உபகரணங்களையும் வழங்கினார்.
இதில் டிஆர்ஓ மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தான கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில் குமரன், ஆர்டிஓ விஷ்ணுபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.