ஆரணி, ஆக.7: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனக்கூறி குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு ஆரணி வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று ஆரணி தாலுகா அளவில் விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் கவுசிகா மற்றும் பிற துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கூட்டம் தொடங்கி நீண்ட நேரமாகியும் பெரும்பாலான அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, குறைதீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால் விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க முடிவத்தில்லை. கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு வேளாண்மை அலுவலக வளாகத்தில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வந்திருந்தனர். ஆனால், அனைத்து துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக்கூறி, விவசாயிகள் திடீரென வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்டரங்கில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்.சரளா, ஆணையாளர் பா.விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் (வேளாண்மை) வரவேற்றார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், கீழ்பென்னாத்தூரில் ஏரி மண் கடத்தலை தடுக்க வேண்டும். சாத்தனூர் அணையில் வரும் தண்ணீரை நந்தன் கால்வாயில் இணைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரியின் உபரிநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும். ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க அதிக வேலை ஆட்களை நியமிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணம் பெறுவதை தடுக்க வேண்டும். வேட்டவலம் தலவாய்குளம் சந்தையில் அதிக வரி வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஆவின் செயலாட்சியர் தமிழரசி, அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் மு.பரணிதரன் நன்றி கூறினார்.