விருதுநகர், ஆக.20: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 2 பேருக்கு தலா ரூ.3 லட்சம், சாலை விபத்தில் காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் என 4 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகைகளை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 13 பேருக்கு தலா ரூ.4,870 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டி, 18 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 32 பேருக்கு இலவச தையல் இயந்திரம் என 33 பேருக்கு ரூ.1.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.