நாகப்பட்டினம்,ஜூலை22: காவிரி டெல்டா மாவட்டத்தில் காயும் 5 லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்காத காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. இதற்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடகோரி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.