திருவாரூர், செப். 8: திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குறுவை நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் வழங்கிட வேண்டும் என வேளாண் துறை ஆணையரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களை வேளாண் துறை உயர் அலுவலர்கள் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டனர். அதன்படி மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் துறை ஆணையர் சுப்ரமணியன் தலைமையில் மாவட்ட கலெக்டர் சாரு, அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். திருவாரூர் சுற்றுலா மாளிகையில் ஆணையர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர், முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் குறுவைப் பயிர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கருகி உள்ளன. இதனால், டீசல் இன்ஜின் வைத்து வாய்க்கால், குட்டைகளில் தேங்கிய தண்ணீரை இரண்டு, மூன்று முறை விட்டும் பயிர்களை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தும் கடைமடைப் பகுதிகளில் பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. எனவே முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாத்திட, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் 2 ஆண்டுகள் குறுவைக்கு காப்பீடு இல்லாத நிலை தொடர்கிறது. இயற்கை சீற்றத்தால், தண்ணீர் தட்டுப்பாட்டால், மழை நீரால் சேதமடையும்போது விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே அரசே நேரடியாக காப்பீட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மதித்து கர்நாடக அரசிடமிருந்து சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க தமிழ்நாடு முதல்வர் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறுவடை காலத்தில் ஈரப்பதம் 20 சதவீதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.