கமுதி / தொண்டி, ஆக. 12: கமுதி குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக நடந்த சதுரங்க போட்டிகளில் அரசு மற்றும் தனியார் என 30 பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துவக்க விழாவிற்கு ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் ஷர்மிளா வரவேற்றார். கமுதி காவல் ஆய்வாளர் விமலா போட்டிகளை துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், தாமரைக்கண்ணன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த போட்டியில், மாணவர் மற்றும் மாணவிகளுக்கு 11 மற்றும் 14, 17, 19 என வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ரஹ்மானியா கார்டன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வருணா ரூபினி, சுபத்ராலின், பிரதீபா மாணவர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
முன்னதாக போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக காவல் ஆய்வாளர் விமலா தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர் இதேபோல், திருவாடானை குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் சதுரங்க போட்டிகள் எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. திருவாடானை சேர்மன் முகமது முக்தர் போட்டியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷாஜகான், ஆசிரியர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் உட்பட நிர்வாகிகள் போட்டியை நடத்தினர்.