மதுக்கரை, மே 24: கோவை குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் செல்லும் சாலையில் 12க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக போத்தனூர், வெள்ளலூர், செட்டிபாளையம், பணப்பட்டி, வடசித்தூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் சென்று வருகிறது. இதேபோல சுற்று வட்டாரத்தில் இருந்து போத்தனூர் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும், போத்தனூர், வெள்ளலூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் தற்போது இந்த சாலை பல இடங்களில் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இந்நிலையில், பழுதடைந்த இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.