Tuesday, September 17, 2024
Home » குருவருளால் ஜகத்திற்கு குருவானவர்

குருவருளால் ஜகத்திற்கு குருவானவர்

by kannappan

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். தமிழகத்திலுள்ள சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு   வேங்கடநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். வேங்கடநாதர் தந்தையின் மறைவிற்கு பிறகு தன் அண்ணன் குருராய பட்டரிடம் வளர்ந்தார். அடிப்படைக் கல்வியை மைத்துனர் லட்சுமி நரசிம்மாச்சாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். மனைவியுடன் கும்பகோணத்தில் குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும், இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பத்தினர் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார். வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. வேங்கடநாதரின் குருவான ஸ்ரீஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்கு பீடாதிபதியாக வேங்கடநாதரை இருக்கக்கூறினார். வேங்கடநாதர் அவர் மனைவியும் மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் கிருபையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார். வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621ம் ஆண்டு பங்குனி மாதம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார். அப்போது அவர் சீடர்களால் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைப் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார். 1671ம் ஆண்டு ராகவேந்திரா சுவாமிகள் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார். அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.தொகுப்பு: ஆர். அபிநயா

You may also like

Leave a Comment

10 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi