தஞ்சாவூர், ஆக.11: தஞ்சாவூர் அடுத்து குருகுலம் பகுதியில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் ஊழியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
எனவே இந்த இரட்டை முறை ஊதியத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநில அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.