கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவருக்கு சொந்தமாக மா.பொ.சி. நகரில் கடை உள்ளது. இந்த கட்டிடத்தை குடியிருப்பாக இவர் மாற்றிய நிலையில், வியாபார தளமாக இருந்த மின் இணைப்பை, குடியிருப்புக்கான மின் இணைப்பாக மாற்ற கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இது குறித்து, சேகர் மின்வாரிய அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் திருநிறைச்செல்வத்தை அணுகி முறையிட்டுள்ளார்.
அப்போது, மின்வாரிய அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் சேகரை பல முறை வரவழைத்து பணத்திற்காக அலைக்கழித்துள்ளார். இதனால், இது தொடர்பாக சேகர், மின்வாரிய வருவாய் கண்காணிப்பாளரிடம் மின் இணைப்பை மாற்றித்தர வேண்டி வலியுறுத்தி உள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மீண்டும் மின்வாரிய அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் மின் இணைப்பை மாற்றித்தர கேட்டபோது லஞ்சமாக ரூ.6000 கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சேகர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்ட 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாறுவேடத்தில் மின்வாரிய அலுவலகத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது, சேகர் ரசாயம் தடவிய ரூ.6000 திருநிறைச்செல்வத்திடம் தரும்போது கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.