கும்மிடிப்பூண்டி, செப். 9: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15வது வார்டு, மேட்டு காலனி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்து. அதன் பின்பு கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருந்து அம்மனுக்கு காப்பு கட்டியபடி பால்குட ஊர்வலம் ரெட்டம்பேடு வழியாக மேளதாளத்துடன் வந்தது. இதைக் காண திருவள்ளூர் நகர், கும்மிடிப்பூண்டி பஜார், வசந்த பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பால்குடம் எடுத்து வந்த பெண்கள் காலில் விழுந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்ற பெண்கள் இறுதியாக கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இறுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியோர்கள் முதல் இளைஞர் வரை சிறப்பாக முன் நின்று நடத்தினர்.