கும்மிடிப்பூண்டி, பிப்.15: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை சக்தியவேடு சாலை, ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு சாலை, மாதர்பாக்கம் சாலை, சாணபூத்தூர் சாலை, பூவலம்பேடு சாலை, கண்ணன்கோட்டை உள்ளிட்ட 350 கிமீ உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இந்த பராமரிப்பில் சாலையோரங்களில் உள்ள மரக் கிளைகள் அகற்றுதல், சென்டர் மீடியன் ஓரம் உள்ள மண்ணை அகற்றுதல், சிறுபாலத்தில் அடைப்பு இருப்பதை சுத்தம் செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து தற்போது வெயில் காலம் வருவதால் கவரப்பேட்டை – சத்தியவேடு சாலையில் பல்வேறு பகுதிகளில் சென்டர் மீடியன் நடுவே வண்ண பூக்கள் பூக்கும் செடிகள் ஏற்கனவே நடப்பட்டுள்ளன. அது தற்போது பூத்துக் குலுங்கி வளர்ந்து வருகிறது. அதற்கு தினந்தோறும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வரும் வெயில் காலத்தை செடிகள் கட்டுப்படுத்தும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அனைத்து சாலைகளில் சிறு குழி இருந்தாலும் உடனடியாக அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.