கும்பகோணம், ஜுன் 3: கும்பகோணம் குமரன் தெருவில் உள்ள யாதவ ஸ்ரீசற்குண மாரியம்மன், யாதவ ஸ்ரீசந்தன மாகாளியம்மன் திருக்கோயில் நூறாவது ஆண்டு மஹோத்சவத்தை முன்னிட்டு காளியம்மன் திருநடன வீதியுலா நேற்று தொடங்கியது. கும்பகோணம் குமரன் தெருவில் உள்ள ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள யாதவ ஸ்ரீசற்குண மாரியம்மன், யாதவ சந்தன மாகாளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டு மஹோத்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் நூறாவது ஆண்டாக கடந்த மே 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, 26ம் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தன மாகாளி புறப்பாடு நேற்று தொடங்கி திருவீதியுலா நடைபெற்றது.
இதனையொட்டி காளியம்மன் திருநடனத்துடன் பவனி வந்த வீதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய், மலர் சரங்கள், எலுமிச்சை பழம், மங்கள பொருட்களான வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அம்மன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்து தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர். அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, காளியம்மன் தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீறு பிரசாதங்களை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து நாளை 4ம் தேதி புதன்கிழமை சந்தன மாகாளியிடமிருந்து காத்தவராயன் சுவாமி வாள் வாங்குதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காத்தவராயன் சுவாமிக்கு திருக்கல்யாணமும், 7ம் தேதி சனிக்கிழமை காத்தவராயன் சுவாமி வேஷதாரிகளுடன் வீதிவலம் வந்து கழுஏறி மீளுதல் நிகழ்ச்சியும், 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சர்க்கரைப்படித்துறையில் இருந்து அலகு காவடிகளுடன் அம்பாள் வீதி வலம் வந்து செடல் திருவிழாவும், 9ம் தேதி திங்கட்கிழமை மஞ்சள் தண்ணீர் விளையாட்டு விழாவுடன் இவ்வாண்டிற்குரிய விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.