கும்பகோணம், மே.26: கும்பகோணம் மடத்துத்தெருவில் அமைந்துள்ளது பகவத் விநாயகர் திருக்கோயில். இந்த ஸ்தலம் காசிக்கு வீசம் அதிகம் கொண்டு ஸ்தலம் என்றும், பகவர் மகரிஷி இதனை கண்டு அறிந்ததால் அவரை போற்றும் வகையில் இந்த விநாயகர் இன்றளவும் பகவத் விநாயகர் என்ற திருநாமத்துடன் போற்றி வணங்கப்படுகிறார். வேண்டுவன அனைத்தும் விரைவில் நிறைவேற்றித்தரும் விநாயகராக இவர் அருள்பாலிப்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகராக துதிக்கப்படுகிறார். இத்தகைய பெருமை கொண்ட விநாயகருக்கு அக்னி நட்சத்திர காலத்தில் அனைத்து உயிர்களுக்கும் எந்தவிதமான இடர்பாடுகளும் ஏற்படக்கூடாது என்ற சிறப்பு பிரார்த்தனையுடன் 1008 இளநீர் கொண்டு மூலவர் பகவத் விநாயகருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோயில் பிரகாரம் முழுவதும் இளநீர் காய்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விநாயக பெருமானுக்கு இளநீர் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.