கும்பகோணம், ஆக.23: கும்பகோணத்தில் சர்வோதய சங்க கடையில் தையல் இயந்திரம் மற்றும் மோட்டாரைத் திருடிச் சென்றவர்களை மேற்கு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர். கும்பகோணம்-தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள கம்பட்ட விஸ்வநாதர் கோயில் கீழ வீதியில் தஞ்சாவூர் சர்வோதய சங்கம் உள்ளது. இங்கு, கைத்தறி ஜவுளி மற்றும் சிகைக்காய், தேன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 17ம் தேதி கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர் முக்கியமான பொருட்கள் இல்லாததால் கடையில் இருந்த தையல் இயந்திரம், மோட்டார் மற்றும் மின் விசிறி (ஃபேன்) ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து, கடை நிர்வாகி பாபு (53) என்பவர் கொடுத்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.