கும்பகோணம், ஜூன் 28: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் 5 வருட போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டுமனை பட்டா வாங்கியதற்கு திருநங்கைகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வாடகை அல்லது போக்கியத்திற்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக தமிழக அரசிடம் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் 9 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
எனவே தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா, பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல் மற்றும் துணை வட்டாட்சியர் நில அளவைத் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு இலவச தொகுப்பு வீடு அல்லது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.