கும்பகோணம், நவ.18: கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் குறைதீர்நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு செய்து, சாகுபடி சான்று வழங்காமல் விவசாயிகளை இழுத்தடிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்தும், பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் திட்டத்தை தனியாரிடமிருந்து மாற்றி அரசே ஏற்று செயல்பட வலியுறுத்தியும், பாபநாசம், அரையபுரம், தட்டுமால்படுகை விவசாயிகளுக்கு நீண்ட காலமாக பட்டா வழங்காத நிலையை கண்டித்தும், கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் சேதத்தை கணக்கெடுக்க உரிய அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தியும், சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டதை ரத்து செய்ய கோரியும்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், குமரப்பா, வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.