கும்பகோணம், ஜூன் 26: கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூர் விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுதா மற்றும் விற்பனைக்குழு செயலாளர் சரசு ஆகியோர் முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சார்ந்த 657 விவசாயிகள் 165 மெட்ரிக் டன் அளவு பருத்தி விளைப்பொருளை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தை சார்ந்த வணிகர்களும், கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டத்தை சார்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி விளைப்பொருளை கொள்முதல் செய்தனர். பருத்தி விளைப்பொருளானது அதிகபட்சமாக ரூ.7,699க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,289க்கும்,சராசரியாக ரூ.6,829க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் நன்கு மலர்ந்த பருத்தியினை தூசிகளை நீக்கி ஈரப்பதம் இல்லாமல் எடுத்து வரும் பட்சத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும் என்பதுடன் தரம் குறைவான பருத்தியினை தனியான தாட்டுகளாக கொண்டு வரவும் அறிவுறுத்தப்படுகிறது.