கும்பகோணம், ஆக. 3: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் தெருமுனை விளக்க கூட்டம் நடத்தினர். ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர், மக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, எல்பிஎஃப், ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியு, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிலாளர் சங்கங்களின் சார்பில் சென்னையில் வரும் 9ம் தேதி நடைபெறும் பெருந்திரள் அமர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் தெருமுனை விளக்க பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பிரசாரத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பேசினர். இக்கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க ஜெயக்குமார், செந்தில்குமார், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மணிமூர்த்தி, ஐஎன்டிஎஸ்சி செல்வராஜ், எல்பிஎஃப் பாரி, ஏஐசிசிடியு மதியழகன் உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு ஓய்வூதியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.